பந்த்ராவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த கரிப் ரத் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸில் (வண்டி எண் 12216) ஜூலை 12 அன்று நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த இரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால், இரயிலில் இருந்த சக பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு டிடிஇ (TTE) எனப்படும் டிக்கெட் பரிசோதகரிடம் ஓடியுள்ளனர்.

“பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, தயவுசெய்து இரயிலை அருகில் உள்ள ஏதாவது ஒரு ஸ்டேஷனில் நிறுத்துங்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து காப்பாற்றிவிடலாம்” என்று கெஞ்சிக் கூத்தாடியுள்ளனர். ஆனால், பயணிகளின் இந்த உருக்கமான கோரிக்கையை டிடிஇ கொஞ்சமும் மதிக்காமல் இரயிலை நிறுத்த முற்றிலும் மறுத்துவிட்டார். ​விதிமுறைகளை காரணம் காட்டி இரயில் நிறுத்தப்படாததால், அந்தப் பெண்ணிற்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் ஓடும் இரயிலிலேயே துடிதுடித்து அவரது உயிர் பிரிந்தது.

இதில் நெஞ்சை பிழியும் சோகம் என்னவென்றால், அவருடன் பயணித்த அவரது 18 வயது மகன், தன் தாய் இறந்துவிட்டாள் என்ற உண்மை தெரியாமல், அவர் வெறும் மயக்கத்தில் தான் இருக்கிறார் என்று கடைசி வரை நம்பிக் கொண்டிருந்தது தான். இந்த கொடுமையைக் கண்ட பயணிகள் அனைவரும் இரயில்வே நிர்வாகத்தின் மீதும், அங்கிருந்த ஊழியர்களின் மீதும் கடுமையான ஆத்திரத்தில் கொந்தளித்துள்ளனர்.

அவசர கால நெறிமுறைகளை இரயில்வே ஊழியர்கள் சரியாகப் பின்பற்றினார்களா? இந்த மரணத்தைத் தடுத்திருக்க முடியாதா? இந்த அலட்சியத்திற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களது கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.