தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பி வந்த கட்சித் தாவல் விவகாரத்தில், தற்போது ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் தயாராக இருந்த 10 அதிமுக எம்.எல்.ஏ-க்கள், தற்போது தங்களது முடிவில் இருந்து திடீரென பின்வாங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களுக்கு கட்சியில் இன்னும் உரிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும், மேலும் எதிர்பாராத விதமாக இடைத்தேர்தல் தடைபட்டிருப்பதுமே இவர்களின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

​தவெக தலைமை மீது ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி காரணமாக, கட்சியில் இணையவிருந்த அந்த 10 எம்.எல்.ஏ-க்களும் தவெக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வந்த ரகசிய பேச்சுவார்த்தைகளை தற்போது முழுமையாகத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

தங்களுக்கு உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசியலில் புதிய விவாதக் களத்தை உருவாக்கியுள்ளது.