தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, “தேர்தலுக்கு முன்பே நான் வெற்றி பெற்றால் லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மையான ஆட்சி அமைப்பேன், காமராஜரின் நேர்மையான நிர்வாகமே நமது நேர்கோட்டு சித்தாந்தம்” என்று திரும்ப திரும்ப உறுதியளித்த முதல்வர் விஜய், தற்போது அதைச் செயலில் காட்டத் தொடங்கியுள்ளார். மக்கள் லஞ்சத்தை எவ்வளவு வெறுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக, பதவியேற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடரிலேயே, “மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக எச்சரித்திருந்தார். தற்போது அந்த எச்சரிக்கை வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டையாக மாறியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து
அலுவலகங்கள் (RTO), சோதனைச்சாவடிகள் என மக்கள் அதிகம் புழங்கும் அரசு அலுவலகங்களில் எப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவார்கள் என்றே தெரியாத அளவிற்கு திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஊழலுக்கு எதிராக வீசப்பட்ட வலையில் 11 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.22.33 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. “லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வதைவிட வேலையை காப்பாற்றிக் கொள்வதே சாலச்சிறந்தது” என்ற பயம் இப்போது அரசு ஊழியர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அதேபோல், பல அரசு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், முறைகேடாக அனுமதி வழங்கிய அதிகாரிகளும் இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். கடந்த வாரம் கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்கமுடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால் இது எங்க விஜய், எங்கள் விஜய்யோட ஆட்சி என்று உறுதியாகச் சொல்லுங்கள்” என்று மக்களுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார்.
இந்த தூய்மையான நிர்வாகம் எப்போதும் தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதும், ஊழல் இல்லாத புதிய சாம்ராஜ்யத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்பதுமே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
