இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, வலைப்பயிற்சியின் போது சீனியர் வீரர் விராட் கோலியுடன் நடத்திய நீண்ட உரையாடல் மற்றும் ரோஹித் சர்மா – விராட் கோலியின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர் சந்திப்பில் உடைத்துள்ள உண்மைகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2027 உலகக்கோப்பை தயாரிப்புக்கான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 14, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற விருக்கும் சூழலில், கில்லுக்கும் விராட்டுக்கும் இடையே நெட் பிராக்டிஸில் நடந்த விவாதம் குறித்துப் பேசிய கேப்டன் கில், “தென்னாப்பிரிக்கா போன்ற கடினமான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு எந்தெந்த ஆல்-ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்களின் காம்பினேஷன் சரியாக இருக்கும் என்பது குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், ரோஹித் மற்றும் விராட்டின் எதிர்காலம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “கடந்த பத்தாண்டுகளாக விராட் பாயும் ரோஹித் பாயும் தான் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாகவும் அடித்தளமாகவும் இருந்து வருகின்றனர்; அவர்களின் அனுபவமும் பங்களிப்பும் அணிக்கு விலைமதிப்பற்றவை” என்று கூறியுள்ளார்.
டி20 தொடரின் ஏமாற்றத்தை மறந்து, புதிய உத்வேகத்துடன் களமிறங்கவிருக்கும் இந்திய அணியின் இந்த வியூகம் குறித்து லட்சக்கணக்கான கிரிக்கெட் நெட்டிசன்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
