2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 127 கிலோ எடையுடன் களமிறங்கி, ராபின் உத்தப்பாவின் விக்கெட்டை தனது ஒற்றைக் கைகளால் பறந்து பிடித்து உலகையே வியக்க வைத்தவர் பெர்முடா அணியின் சுழற்பந்து வீச்சாளர் டுவைன் லெவராக்.

அந்தப் போட்டியில் அவரது சுறுசுறுப்பைக் கண்டு வர்ணனையாளர்கள் “பிரிட்ஜ் திறந்தது” (The fridge has opened) என்று வியந்து புகழ, அந்தச் சாதனை கேட்ச் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளது.

‘ஸ்லகோ’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட லெவராக், சர்வதேச கிரிக்கெட்டில் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2009-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பெர்முடாவில் சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்தாலும் அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வரும் அவர், இன்றும் தனது நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு அடையாளமாகப் போற்றப்படுகிறார்.

ஜூலை 14, தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஜாம்பவானின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ச், இன்றும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.