கும்பகோணம் அருகே உள்ள பாலகரை பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட சின்னதுரை என்ற முதியவர், அங்குவழியாகச் சுற்றிவந்த பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களால் சுற்றிவளைக்கப்பட்டு கொடூரமாகக் கடிக்கப்பட்டுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால், அந்த முதியவரைக் காப்பாற்ற யாருமாத சூழல் ஏற்பட்டுள்ளது. வயோதிகம் காரணமாக நாய்களிடமிருந்து தப்பியோட முடியாமல் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வெறிநாய்கள் அவரைத் தாக்கியுள்ளன.
நாய்களின் இந்தத் திடீர் மற்றும் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கடுமையான அச்சத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெருநாய்களை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், ஆபத்தான முறையில் சுற்றிதிரியும் நாய்களைப் பிடிக்கவும் கோரி அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகள் குறித்து நீதிமன்றங்கள் ஏற்கனவே கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. பொது இடங்களில் பிடிபடும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல் பிரத்யேகப் பராமரிப்பு மையங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான மருத்துவ வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு மையங்களை விரைந்து அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசுத் தரப்பில் கடுமையான மற்றும் விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
