சமூக வலைத்தளங்களில் லைக்குகளும், வியூஸ்களும் வாங்க வேண்டும் என்பதற்காக இன்றைய இளைய தலைமுறையினர் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை என்பதற்கு இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமே சாட்சி. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக இரண்டு சிறுவர்கள் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டு, அவர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைக்குகள் மற்றும் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பெண்ணின் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் விளையாட யாருக்கும் உரிமை இல்லை என்று நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவை மத்திய பிரதேச போலீசாரின் (Madhya Pradesh Police) எக்ஸ் தளப் பக்கத்திற்கு டேக் செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ரீல்ஸ் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் இத்தகைய அராஜகங்களை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என்றும், இந்த சிறுவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.