நெரிசலான உள்ளூர் ரயில் ஒன்றில் உடல்நிலை சரியில்லாத முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணம் செய்த அங்கித் பாண்டே என்ற பயணியின் சமூக வலைதளப் பதிவின்படி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றும் அந்த முதியவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமர இடம் கேட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பெண், “எனக்கும் உடம்பு சரியில்லை, நான் இடம் தரமாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வலியுடனும் உடல்நலக் குறைவுடனும் அந்த முதியவர் நின்றுகொண்டிருந்தபோது, ஒருகட்டத்தில் அவர் வாந்தி எடுத்ததால் கோபமடைந்த அந்தப் பெண், அவரை அறைந்து திட்டியது அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிட்டுள்ள அந்தப் பயணி, சமூகத்தில் மனிதநேயம் குறைந்து வருவதையும், முதியவர் மீது அந்தப் பெண் தாக்குதல் நடத்தியதையும் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில், அந்த முதியவர் கண்ணீருடன் வேறு இடத்திற்குச் சென்றார்.

இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “மனிதநேயம் என்பது விலைமதிப்பற்றது, ஆனால் இன்றைய சூழலில் அது எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

“>

இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைச் செய்த அந்தப் பெண்ணின் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வருவதுடன், சமூகம் அறநெறிகளை மறந்து வருவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.