“இந்த சின்னப் பசங்க ரெண்டு பேரும் எங்களோட தனிப்பட்ட சுதந்திரத்துக்கு ரொம்ப தடையா இருக்கானுங்க, அதனால்தான் இவனுங்களை இரும்புக் கம்பியால அடிச்சு, சிகரெட்டால சூடு வச்சோம்!”
என்று தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் ஹுசூர்நகரில் தங்களது சொந்தப் பிள்ளைகளையே சித்திரவதை செய்த வழக்கில் கைதான பெற்றோர் போலீசாரிடம் எந்தவொரு குற்ற உணர்ச்சியுமின்றி வாக்குமூலம் அளித்துள்ளது ஒட்டுமொத்த தேசத்தையுமே அதிர வைத்துள்ளது.
லாரி ஓட்டுநரான 43 வயது நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவரும்தான் தங்களது 5 வயது மற்றும் 2 வயதுடைய இரண்டு பிஞ்சு மகன்களை இரும்புக் கம்பியால் அடித்தும், சூடான கரண்டிகள் மற்றும் சிகரெட்டுகளால் உடலெங்கும் கொடூரமாகச் சூடு வைத்தும் நரக வேதனையைக் கொடுத்துள்ளனர்.
குழந்தைகள் சூடான கரண்டிகளால் மீண்டும் மீண்டும் சூடு போடப்பட்டதாகவும், சிகரெட்டுகளால் சுடப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ரவி தனது முதல் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரும் ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த இந்துவை மணந்தார்.
இந்துவுக்கு இரண்டு வயது மகன் ஒருவனும், முந்தைய திருமணத்தின் மூலம் மற்றொரு மகனும் இருந்தனர். காவல்துறை விசாரணையின் போது, குழந்தைகளைத் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்குத் தடையாகக் கருதியதாகவும், அதன் காரணமாகத் தங்கள் கோபத்தை அவர்கள் மீது காட்டியதாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, காவல்துறை இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பல நாட்களாக இந்தத் தம்பதியினர் குழந்தைகளைச் சித்திரவதை செய்து வந்த நிலையில், பிஞ்சுகளின் அலறல் சத்தம் தாங்காமல் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோதுதான், 2 வயதுக் குழந்தையின் கை மணிக்கட்டு உடைந்திருப்பதும் உடலெங்கும் தீக்காயங்கள் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாக போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐசிடிஎஸ் மேற்பார்வையாளர், குழந்தைகளை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி கிடைக்கச் செய்துள்ளார்.
சிகிச்சைக்குப் பின் அந்த இரு குழந்தைகளும் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்குப் பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்பொழுது சூர்யபேட் போலீசார் இந்த இரக்கமற்ற தம்பதியினர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
