சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், சில காட்சிகள் மட்டுமே மக்களின் மனதைத் தொட்டு, நீண்ட நேரத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் பெண் ஒருவர் தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த ஜிம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சியில், இளஞ்சிவப்பு நிறப் புடவை அணிந்த பெண் ஒருவர் தரையைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது சுற்றிலும் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து, அங்குள்ள விலையுயர்ந்த உடற்பயிற்சி இயந்திரம் ஒன்றில் ஏறி, சில நொடிகள் ஆர்வத்துடன் அதை இயக்கிப் பார்க்கிறார். பின்னர், உடனடியாக அதிலிருந்து இறங்கித் தனது பணியைத் தொடர்கிறார். வறுமையிலும் மனிதர்களுக்குள் இருக்கும் ஆசைகளையும், கனவுகளையும் பிரதிபலிக்கும் இந்த சில நொடிக் காட்சி காண்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
This Video breaks my heart 💔
Everyone has dreams,
some are fortunate enough to live them, while others aren’t.
Watch till the end… pic.twitter.com/Yldr7FaKS2
— Tehxi (@yajnshri) July 8, 2026
மக்களை நெகிழச் செய்த இந்த வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “இந்தக் காட்சி என் இதயத்தை உடைத்துவிட்டது; கனவுகள் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் அதை வாழும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது” என்று பல இணையவாசிகள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதே வேளையில், “அவர் அந்த இயந்திரத்தை இயக்கும் முறையைப் பார்த்தால், இது அவருக்கு முதல் முறை போலத் தெரியவில்லை” என்றும், “பூங்காக்களிலேயே இதுபோன்ற உடற்பயிற்சி கருவிகள் இலவசமாகக் கிடைக்கின்றன, அவர் வெறும் ஆர்வத்தில்தான் இதைச் செய்துள்ளார்” என்றும் நெட்டிசன்கள் பலவிதமான கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
