சூடான உணவை உட்கொள்வது ஆரோக்கியமாகவும் இதமாகவும் கருதப்பட்டாலும், அளவுக்கு அதிகமான சூடான உணவை அவசரமாகச் சாப்பிடுவது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். சீனாவைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கொதிக்கும் ‘ஹாட்பாட்’ உணவை ஆறவிடாமல் வேகமாகச் சாப்பிட்டதால், அவரது உணவுப்பாதையில் 8 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரிய புண் ஏற்பட்டுள்ளது.
உணவைச் சாப்பிட்ட உடனேயே அவருக்கு நெஞ்சுவலியும், தொண்டையில் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. சாதாரண அசெகரியம் என்று நினைத்து அவர் ஐஸ் தண்ணீர் குடித்துள்ளார்; ஆனால், அடுத்த நாள் நிலைமை மோசமடைந்து, தண்ணீர் கூடக் குடிக்க முடியாத சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனித உணவுப்பாதை 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என்றும், ஆனால் கொதிக்கும் ஹாட்பாட் உணவுகள் 80 முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கொண்டிருப்பதால் இந்தத் தீவிரமான உள்நோவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அளவுக்கு அதிகமான சூடான உணவைச் சாப்பிட்ட உடனே ஐஸ் தண்ணீர் குடிப்பது, பாதிக்கப்பட்ட திசுக்களை மேலும் புண்ணாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவில் ‘ஹாட்பாட்’ உணவு மிகவும் பிரபலமாக இருந்தாலும், இத்தகைய மிக அதிக சூடான உணவுகளைச் சாப்பிடும் கலாச்சாரப் பழக்கம் அங்கு பெரும் சுகாதார கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பதிவாகும் உணவுப்பாதை புற்றுநோய் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் சீனாவிலேயே ஏற்படுவதாகவும், இதற்கு மிகச் சூடான உணவுகளை உட்கொள்ளும் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
65 டிகிரி செல்சியஸிற்கு மேல் உள்ள சூடான பானங்களை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணியாக உலக சுகாதார நிறுவனமும் பட்டியலிட்டுள்ளது. எனவே, “உணவை எப்போதும் சூடாகவே சாப்பிட வேண்டும்” என்ற பழைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
