“மேற்கு ஆசியாவில் போர் மூள்வதைத் தடுப்பதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தடையையும் மீறி ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனான் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொலைபேசியில் அழைத்து, ஈரானியத் தாக்குதல்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் ஈரானுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்ட நெருங்கிவிட்டதாகவும், தற்போதைய நிகழ்வுகள் அதைச் சீர்குலைக்கக் கூடாது என்றும் டிரம்ப் கேட்டுக்கொண்ட போதிலும், நெதன்யாகு அவரது கோரிக்கையை முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய பள்ளி விடுமுறையை அறிவித்த இஸ்ரேல், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் தப்ரிஸ் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலை இஸ்ரேலிய ராணுவமும், அங்கு கேட்ட வெடிச்சத்தங்களை ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA)-வும் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல் சுழற்சி கடந்த 3,000 ஆண்டுகளாகத் தொடர்வதைப் போன்றது என அதிருப்தி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அமெரிக்க ராணுவம் தற்பொழுது தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.”