நவீன காலத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்போ அல்லது நேர்காணலுக்குச் செல்லும் முன்போ அதைப் பற்றி ஆன்லைனில் தேடித் தெரிந்துகொள்வது பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், மூத்த சொத்து மேலாளர் பணிக்காக நேர்காணலில் கலந்துகொள்ளத் தயாரான ஒரு நபர், இன்டர்வியூ செல்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் ஆன்லைன் மதிப்புரைகளைக்  கூர்ந்து கவனித்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் மோசமான பணிச்சூழல் குறித்தும், முந்தைய மேலாண்மை குறித்து ஊழியர்கள் பதிவிட்டிருந்த எதிர்மறையான கருத்துகளையும் பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நிறுவனத்தின் மீது பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்த கடுமையான விமர்சனங்களையும், நிர்வாகம் அவற்றை எதிர்கொண்ட விதத்தையும் கண்ட அந்த நபர், அங்கு வேலை செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். இதனால் பாதுகாப்பு கருதி நேர்காணல் தொடங்கும் முன்பே தான் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று  நிறுவனத்திற்கு மெசேஜ் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

Canceled an interview due to bad online culture reviews. The owner immediately proved my point.
by
u/Spare-Ad-3395 in
recruitinghell

ஆனால், நிறுவனத்தின் ரெக்ரூட்டரும் அந்த பிசினஸின் உரிமையாளருமான நபர் அனுப்பிய ஆவேசமான பதில், அந்த மனுதாரர் எடுத்த முடிவு நூற்றுக்கு நூறு சரி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

“நீங்கள் இந்த முடிவை எடுத்தது வருத்தமளிக்கிறது; இதன் மூலம் எனது நிறுவனத்தின் குறிக்கோள்களுடன் உங்கள் சிந்தனை ஒத்துப்போகவில்லை என்பது தெளிவாகிறது, நானே இந்த நிறுவனத்தை வாங்கி சில மாதங்கள் தான் ஆகிறது” என்று அந்த உரிமையாளர் திமிராகப் பதிலளித்துள்ளார்.

இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை அந்த நபர் ரெடிட் (Reddit) பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை மீம்ஸ் போட்டுக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதிர்ச்சியற்ற முறையில் நடந்துகொண்ட அந்த ஓனரின் செயலால் “மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியுள்ளீர்கள்” என்று பலரும் அந்த வேலை தேடும் நபருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதுடன், இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.