சிங்கப்பூர் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும், கணிசமான அளவில் மலாய் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் பல தலைமுறைகளாக இணைந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கப்பூரை இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து அங்குள்ள பண்பாட்டுக் கோட்பாட்டைச் சீர்குலைத்து வருவதாக, சீனாவைச் சேர்ந்த வலைத்தளங்களில் இருந்து மிகவும் சர்ச்சைக்குரிய பதிவுகள் திட்டமிட்டுப் பகிரப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, இந்திய சமூகத்தினரைக் குறிவைத்து சீனாவிலிருந்து வதந்தியாகப் பரப்பப்படும் அத்தகைய இனவெறிப் பதிவுகளைத் தங்களின் தளங்களில் இருந்து உடனடியாகத் தடுக்குமாறு யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய உலகளாவிய சமூக ஊடகத்தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் எட்வின் டோங், “இந்தக் காணொளிகள் நமது பன்முக சமூகத்தை நேரடியாகத் தாக்குவதோடு, இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் சதி செய்கின்றன; ஆனால் இது நமது இயல்பு அல்ல” என்று ஆவேசமாக உடைத்துப் பேசியுள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொருசமூகமும் சமமாக மதிக்கப்படுகிறது என்றும், நாட்டின் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முற்படும் எந்தவொரு செயலையும், குறிப்பாக அது வெளிநாட்டினரால் பரப்பப்படும்போது அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இணையத்தில் தாங்கள் பார்க்கும் விஷயங்களில் மக்கள் விவேகத்துடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும், சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கும் அத்தகைய போலிப் பதிவுகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
