தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அண்மையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாடியுள்ளார்.

“திரையில் மூன்று மணி நேரத்திற்குள் ஊழல்வாதிகளையும் வில்லன்களையும் வீழ்த்தும் நாயகனாக விஜய்யை ரசிகர்கள் ரசித்தனர்; ஆனால், தற்போது அதைவிடப் பெரிய பொறுப்பைத் தமிழக மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்” என்று அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் விஜயுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய மலேசியப் பிரதமர், 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ்  உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரவிருப்பதாகவும், அப்போது வாய்ப்பு அமைந்தால் தமிழ்நாட்டிற்கும் ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துவதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது நண்பரான முதலமைச்சர் விஜயிடம் தமிழக மக்களின் நலனுக்காக அவர் ஏற்றுக்கொண்டுள்ள பெரும் பொறுப்பிற்கு மீண்டும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், சிறப்பான எதிர்காலத்திற்காகவும் திறம்பட வழிநடத்தி ஆட்சிபுரியத் தேவையான வலிமையும் ஞானமும் முதலமைச்சர் விஜய்க்குத் தொடர்ந்து கிடைக்கப் பெற வேண்டும் என்றும் அவர் மனதார வாழ்த்தியுள்ளார்.