பெங்களூரு அக்கிபேட்டையில் சாலையோரம் நின்றிருந்த பசு மாட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் நடந்துள்ளது.

சாலையில் நடமாட்டம் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்து அந்த நபர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, போலீசார் தாங்களாகவே முன்வந்து மே 17 அன்று வழக்குப் பதிவு செய்து, சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஷாபாஸ் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு மாதமாக காட்டன்பேட்டையில் தங்கி டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரைக் கைது செய்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அவருக்கு இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்றும், அவரது நடத்தை வக்கிரமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.