ராஜஸ்தான் மாநிலத்தில், விளையாடிக் கொண்டிருந்த இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. டினா (8), லட்சுமி (5) என்ற அந்த இரு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பழுதுபார்ப்பதற்காக வந்திருந்த ஒரு காரின் உள்ளே சென்று உட்கார்ந்துள்ளனர்.

எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதால், அவர்களால் மீண்டும் வெளியே வர முடியாமல் போயுள்ளது. காரில் பேட்டரி இல்லாததால் கதவுகளைத் திறக்க முடியவில்லை என்றும், கோடை வெயிலின் கடுமையான வெப்பம் காரணமாகக் காருக்குள் மூச்சுத்திணறி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பதும் அங்குள்ள சிசிடிவி  காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

“>

 

பல மணி நேரமாகியும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் தேடியபோதுதான், கார் சர்வீஸ் சென்டர் அருகே நின்ற காரில் சிறுமிகள் இருவரும் மயங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை உடனடியாக மீட்டபோதிலும், அதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டதால் சிறுமிகளின் உயிர் பிரிந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் தங்களின் தாயை இழந்த இந்தச் சிறுமிகள், தந்தை ரமேஷிற்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்துள்ளனர். தற்போது கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீதத்தால் அந்த முழுக் குடும்பமும் மீளாத் துயரத்தில் மூழ்கியுள்ளது.