பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும் டீ கேட்டுள்ளார்.

அதற்கு உரிமையாளர் மஞ்சுநாத், ஏற்கனவே குடித்த டீக்காக ரூ.200 கடன் பாக்கி இருப்பதாகக் கூறி, அந்தப் பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,அது கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனியப்பா, அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மஞ்சுநாத்தின் தலை மற்றும் மார்பில் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார்.

பலத்த காயமடைந்த மஞ்சுநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முனியப்பாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முனியப்பா ஏற்கனவேதனது சொந்தத் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார் என்ற பகீர் பின்னணி தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து வந்த சில நாட்களிலேயே வெறும் 200 ரூபாய் கடனுக்காக டீ கடை உரிமையாளரைக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.