விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடியபோது, அங்குள்ள ஒரு கிணற்றில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.‌

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பிரபாகரன் காதலித்து வந்ததே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து, பிரபாகரனை கழுத்தை அறுத்துக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.