உத்திரபிரதேசம் டேராடூன் பகுதியில் நடந்த ஒரு வாகன வாடகைச் சேவை தொடர்பான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜான்வி சௌத்ரி என்ற இன்ஸ்டாகிராம் உள்ளடக்க உருவாக்குநர் தனது தோழியுடன் இரவு நேரத்தில் ராபிடோ பைக் டாகசியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத துயரம் நடந்துள்ளது.
அப்போது வெளியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், செயலியில் காட்டப்பட்ட சரியான வழியைப் பின்பற்றாமல் வேறு ஒரு மாற்று வழியில் செல்லுமாறு அந்த ஓட்டுநர் வற்புறுத்தியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து, பயணிகள் ஓட்டுநரின் போக்கைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர் இரவு சுமார் 8:30 மணியளவில் கடுமையான மழையைப் பொருட்படுத்தாமல் பயணத்தின் பாதியிலேயே இரு பெண்களையும் சாலையோரத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
கொட்டும் மழையில் மற்றொரு வாகனத்திற்காகப் பாதுகாப்பு இல்லாமல் தாங்கள் தவித்து நின்ற அந்தத் தருணம் தனது வாழ்நாளின் மிக மோசமான அனுபவம் என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விவரித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியதை அடுத்து, இரவில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்துத் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் மூலம் பதிலளித்துள்ள ராபிடோ நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து முன்னுரிமை அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
