சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்ததை அடுத்து, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர் சொந்தமாக வைத்துள்ள கட்டிடத்தில் இயங்கிவரும் எஸ்பிஐ வங்கியின் லிப்ட் முறையாகச் செயல்படவில்லை என்று வங்கி நிர்வாகம் தரப்பில் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் முறையிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கயல்விழி தரப்பு கூறிவந்த நிலையில், இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கயல்விழி கோபமாகப் பேசிப் பேசிக் கொண்டிருக்கும்போது, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் தனது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு மிகவும் சாதாரணமாகவும் அமைதியாகவும் அதைக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார். இதைக் பார்த்த கயல்விழி கடும் ஆவேசமடைந்து, “நான் தீவிரமாகப் பேசும்போது நீ என்ன கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா?” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென மேலாளரின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார்.
View this post on Instagram
உடனே கயல்விழியுடன் வந்த நபர் பதறிப்போய் அவரை உடனடியாகச் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங், தன்னைத் தாக்கிய கயல்விழி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையைத் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். மேலும் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கயல்விழி மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
