நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக வக்கீல் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் பாண்டி என்பவரது மனைவி ராஜலட்சுமி, கடந்த மே 1-ம் தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தனது அக்காவின் மரணத்திற்கு பூலுடையார் தான் காரணம் என்றும், அவர் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் தம்பி அருணாசலராஜா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குப்பழி வாங்கத் திட்டமிட்டார்.
இதனால் நேற்று முன்தினம் பூலுடையார் வீட்டில் இருந்தபோது, அங்கு காரில் வந்த மர்ம கும்பல் அவரை ஆயுதங்களுடன் தாக்க முயன்றது. அவர்களிடமிருந்து தப்பிக்க பூலுடையார் வீட்டை விட்டு வெளியே ஓடியும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், கொலையில் தொடர்புடைய அருணாசலராஜா மற்றும் அவரது நண்பர் ராம் ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
