சென்னை வியாசர்பாடியில் துருதுருவென சேட்டை செய்த 6 வயது மகனை, பெற்ற தாயே கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த வீரச்செல்வன் – சிவரஞ்சனி தம்பதிக்கு கிருஷ்ணன் (6) மற்றும் மித்ரன் (9 மாதங்கள்) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணன் சிறுவயதிலிருந்தே மிகவும் மூர்க்கத்தனமாகவும், அதிக சுறுசுறுப்புடனும் (Hyperactive) இருந்து வந்துள்ளான்.
சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது தம்பியின் கழுத்தில் இருந்த சாமி கயிற்றைப் பிடித்து இழுத்து விளையாடியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, “கழுத்தை இறுக்கினால் வலிக்கும் என்பது உனக்குத் தெரிய வேண்டாமா?” என்று கேட்டு, பாடம் புகட்டுவதற்காக கிருஷ்ணனின் கழுத்தை தனது துப்பட்டாவால் இறுக்கியுள்ளார்.
இதில் மூச்சுத் திணறி குழந்தை மயங்கி விழுந்துள்ளான். குழந்தை தூங்குவதாக நினைத்த சிவரஞ்சனி, மறுநாள் காலையில் எழுப்பிப் பார்த்தபோது கிருஷ்ணன் சுயநினைவின்றி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதலில் குழந்தை சோபாவிலிருந்து விழுந்துவிட்டதாகக் கூறி சிவரஞ்சனி நாடகமாடினார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் மூச்சுத் திணறலால் குழந்தை இறந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சிவரஞ்சனி உண்மையை ஒப்புக்கொண்டார்.
“வேண்டுமென்று கொல்லவில்லை, அவனுக்கு வலி தெரிய வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
