ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் இன்னும் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படங்களுக்கு அந்த நபர் ‘ஐ லவ் யூ ஜான்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் அந்நிய நபருடன் இதுபோன்ற புகைப்படங்களைப் பதிவிடுவதும், அதற்கு வரும் காதல் கமெண்ட்களும் கணவரை மன ரீதியாகத் துன்புறுத்துவதற்கு சமம் என்று கூறி, அந்தத் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக 2017 முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விசாரணையின் போது அந்தப் பெண், அந்தப் புகைப்படங்கள் தன்னுடையதுதான் ஆனால் அந்த சமூக வலைதளக் கணக்கு தன்னுடையது அல்ல என்று வாதிட்டார்.
மேலும் அந்த நபர் தனது உறவினர் என்றும் கூறினார். ஆனால், இதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கத் தவறியதால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி, கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிந்து வருமாறு வற்புறுத்துவதும் ஒரு வகை கொடுமைதான் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
முதலில் விவாகரத்துக்குச் சம்மதித்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட அந்தப் பெண், பின்னர் காரணமே இல்லாமல் பின்வாங்கியது உள்நோக்கம் கொண்டது என்று கூறி நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
