அகமதாபாத் அருகே உள்ள வட்வா பகுதியில், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தை கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஃபர்சானா என்ற இளம்பெண், 1992-ஆம் ஆண்டு தனது காதலன் சம்சுதீன் மற்றும் அவரது நண்பர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றில் புதைக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த ரகசியம், கொலையாளியின் குடும்பத்தில் ஏற்பட்ட அமானுஷ்ய பயத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பெண்ணின் ஆவி தங்களை வந்து பயமுறுத்துவதாக நம்பிய குடும்பத்தினர், மாந்திரீகம் செய்தபோது உண்மையை உளறியுள்ளனர். இதை ரகசியமாக கண்காணித்த போலீசார், தற்போது கிணற்றைத் தோண்டி எலும்புக்கூட்டை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட எலும்புக்கூடு, தலைமுடி மற்றும் உடலின் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. தனது காதலிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட சம்சுதீன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தத் துரோகத்தைச் செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட சம்சுதீனின் நண்பர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
34 ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்த அந்த வீட்டில் புதைக்கப்பட்ட உண்மை, தற்போது அறிவியல் மற்றும் புலனாய்வு மூலம் நிரூபிக்கப்பட உள்ளது. உயிரிழந்த பெண்ணின் சகோதரருடன் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்து இறுதி முடிவை அறிவிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
