‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் அபரிமிதமான வாய்ப்புகளின் பூமியாக இந்தியா எப்போதுமே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. கடின உழைப்பாளிகளுக்கு இந்த நாட்டில் எப்போதும் பஞ்சமில்லை என்ற கருத்து நிலவி வரும் வேளையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் வெறும் பேச்சை மட்டும் நம்பத் தயாராக இல்லை. தங்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள். இதற்குச் சான்றாக, 26 வயது இளைஞர் ஒருவர், இந்தியாவில் தனக்கு நல்ல வருமானம் இருந்தும் ஏன் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார் என்று பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
பிரபல தனிநபர் நிதி ஆலோசகர் அன்சுமான் சர்மாவின் நேரடி ஆலோசனைக் நிகழ்ச்சியில் டேனியல் என்ற இளைஞர் பேசியுள்ளார். தனது தற்போதைய மாத வருமானம் 3,700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய்) என்று கூறும் அவர், இவ்வளவு நல்ல வருமானம் இருந்தும், தனது சேமிப்பை எவ்வாறு சரியாகப் கையாள்வது என்ற குழப்பத்தில் இந்த ஆலோசனையை நாடியுள்ளார்.
View this post on Instagram
தொடர்ந்து பேசிய டேனியல், தனது எதிர்காலத் திட்டம் குறித்துப் பகிரங்கமாக உடைத்தார். “எனது வாழ்நாள் கனவே ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கு நிரந்தரக் குடியுரிமை பெறுவதுதான். அதற்காகவே தற்போது பணத்தைச் சேமித்து வருகிறேன். மாதச் செலவு 1.2 லட்சம் போக, மீதித் தொகையை இதற்காகவே ஒதுக்குகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன்,” என்றார். இதைக் கேட்ட நிதி ஆலோசகர், அடுத்த 7 மாதங்களுக்கு மாதம் ₹1.5 லட்சம் வீதம் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யுமாறு ஒரு நடைமுறை ஆலோசனையை வழங்கினார். ஆனால், விவாதம் இத்துடன் முடியவில்லை. இவ்வளவு பெரிய வருமானம் இருந்தும் ஏன் இந்தியாவை விட்டுப் போக நினைக்கிறீர்கள் என்ற அன்சுமான் சர்மாவின் கேள்விக்கு அந்த இளைஞர் அளித்த பதில் தான் வைரலானது.
“இன்றைய சூழலில் இந்தியாவில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனக்குக் குறைவாக உள்ளது. வாய்ப்பு கிடைத்தால், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் நிலையான சூழல் கொண்ட ஒரு வெளிநாட்டில் குடியேறுவதையே நான் விரும்புகிறேன்,” என்று டேனியல் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ஆதரவாகப் பேசிய நிதி ஆலோசகரும், இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு மற்றும் இதர வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கோடிட்டுக் காட்டினார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சிலர் இளைஞரின் முடிவை ஆதரித்தும், மற்றும் சிலர் இந்தியாவில் உருவாகி வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் புறக்கணிப்பது தவறு என்றும் இணையத்தில் இருவேறு கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.
