மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஆன்மிக நகரான சித்ரகூட்டின் தேவாங்கனா பள்ளத்தாக்கு பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்காகப் படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர், சமூக விரோதிகள் சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தடுக்க முயன்ற அவரது நண்பனைத் தாக்கி, கைகால்களைக் கட்டி புதரில் வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான அவரது 17 வயது நண்பனின் அழைப்பின் பேரில் சித்ரகூட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். புதன்கிழமை மதியம் இருவரும் அங்குள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கு மலையில் உலாவிக்கொண்டே, தங்களது மொபைல் போனில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், தங்களை வனத்துறை  ஊழியர்கள் என்று கூறி இருவரையும் மிரட்டியுள்ளனர். இதற்கு அந்த சிறுவன் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் தங்களது இடுப்பு பெல்ட்டை கழற்றி அவனைத் துடிக்கத் துடிக்க அடித்துள்ளது. மேலும், அவனது கைகால்களைக் துணியால் கட்டி, அங்கிருந்த ஆள் நடமாட்டமில்லாத புதருக்குள் வீசிவிட்டு, அந்த மாணவியைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இக்கொடூர சம்பவத்திற்குப் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. புதரில் வீசப்பட்ட சிறுவன் பெரும் போராட்டத்திற்குப் பின் தனது கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, மொபைல் சிக்னல் கிடைத்தவுடன் உடனடியாக 112 என்ற அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சித்ரகூட் எஸ்பி அருண் குமார் சிங், குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.