ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சந்தித்த தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்தத் தொடரை வெற்றியோடு தொடங்கினாலும், அணியின் தேர்வு முறை குறித்து தற்போதே விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அசத்தலாக விளையாடிய அதிரடி பேட்டர் ரஜத் படிதார் இந்தத் தொடருக்கான அணியில் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நடப்புத் தொடரில் ரிங்கு சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ரஜத் படிதார் எங்கே? ஆர்சிபி அணிக்கு இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்தது மட்டுமின்றி, ஒரு சிறந்த பேட்டராகவும் அவர் தொடர்ந்து தன்னை நிரூபித்து வந்துள்ளார். அப்படி இருந்தும் இந்தத் தொடருக்கான தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படக்கூட இல்லை. ஐபிஎல் தொடரில் ஜொலித்த பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் போது, படிதாரை மட்டும் ஏன் புறக்கணித்தார்கள்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அணியின் சமநிலை குறித்துப் பேசிய விஹாரி, “தற்போதைய இந்திய டி20 அணியில் பெரும்பாலானோர் இடது கை பேட்டர்களாகவே உள்ளனர். அணியில் சமநிலையைக் கொண்டு வர ரஜத் படிதார் அல்லது சஞ்சு சாம்சன் போன்ற வலது கை பேட்டர்களில் ஒருவருக்குக் கண்டிப்பாக வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். பிரபுசிம்ரன் சிங் அணியில் இருந்தாலும், முதல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனே விளையாடுவார் என்பதால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம்” என்று இந்திய அணியின் தற்போதைய தேர்வு உத்தியை விஹாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
