மத்தியக் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் தர்மேந்திர பிரதானின் சொத்து மதிப்பு மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பிரமாணப் பத்திரத்தின்படி, தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.6.92 கோடி ஆகும். அதே வேளையில், அவர்களுக்கு ரூ.2.30 கோடி அளவிற்கு கடன்கள் உள்ளன.

நிதி ஆண்டில் இவரது ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சமாக இருந்த நிலையில், இவரது மனைவி மிருதுளா தாக்கூரின் ஆண்டு வருமானம் ரூ.49.92 லட்சமாகப் பதிவாகியுள்ளது.
அமைச்சரின் கையில் இருக்கும் பணப் புழக்கத்தைப் பொறுத்தவரையில், தர்மேந்திர பிரதானிடம் ரூ.35,000 ரொக்கமும், அவரது மனைவியிடம் ரூ.40,000 ரொக்கமும் உள்ளது.

அசையும் சொத்துக்களில், தர்மேந்திர பிரதான் 200 கிராம் தங்கத்தையும், 2.5 கிலோ வெள்ளியையும் வைத்துள்ளார். ஆனால், அவரது மனைவி மிருதுளாவிடம் அரை கிலோ (500 கிராம்) தங்கமும், 10 கிலோ வெள்ளியும் உள்ளன. இவர்களது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ.48.5 லட்சத்திற்கும் மேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையாச் சொத்துக்களைப் பொறுத்தவரையில், ஒடிசா மாநிலத்தில் தர்மேந்திர பிரதானுக்குச் சொந்தமாக ரூ.12 லட்சம் மதிப்பில் விவசாய நிலமும், ரூ.20.50 லட்சம் மதிப்பில் விவசாயம் அல்லாத நிலமும் உள்ளன. இது தவிர, உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திராபுரம பகுதியில் ஒரு பிளாட் மற்றும் புவனேஸ்வரில் ஒரு குடியிருப்பு வீடு என தம்பதியருக்குச் சொந்தமாக ரூ.1.98 கோடி மதிப்பிலான குடியிருப்புச் சொத்துக்கள் உள்ளன. மேலும் வங்கி வைப்புத் தொகைகள், பரஸ்பர நிதிகள்  மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளில் கணிசமான தொகையை இவர் முதலீடு செய்துள்ளார்.

கல்விப் பின்னணியைப் பொறுத்தவரை, ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில்  முதுகலைப் பட்டம் பெற்றவர் தர்மேந்திர பிரதான். இவரது தந்தையான தேவேந்திர பிரதானும் ஒரு முன்னாள் மத்திய அமைச்சராவார். தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான் அமெரிக்காவின் புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ‘ஃப்ளெட்சர் பள்ளி’யில் சட்ட மேற்படிப்பை  முடித்துள்ளார். இவரது மகன் நிஷாந்த் பிரதான் தற்போது கல்வியைத் தொடர்வதுடன், அரசியலில் இருந்து விலகியே இருக்கிறார்.