புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தர்மசம்வர்த்தினி தேவி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோயில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருவாரூர் ஆலங்குடியைப் போலவே, இத்தலமும் “இரண்டாம் குரு ஸ்தலம்” என்று ஆன்மீக பெரியோர்களால் போற்றப்படுகிறது.

நந்தி பகவானின் நெற்றிப் பகுதியில் திருநீற்றுத் திலகம் அமைந்திருப்பதாலேயே இங்கிருக்கும் ஈசனுக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் அமைந்தது.மாணிக்கவாசகர் ஆவுடையார்கோயிலுக்குப் பயணம் செய்தபோது இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மீது இரு முனிவர்களுடன் அருள்பாலிக்கும் ‘மேத தட்சிணாமூர்த்தி’ சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், இங்குள்ள நந்தி பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுவதால், ‘மால் விடை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

சூரிய பகவானின் கதிர்கள் நேரடியாகச் சிவலிங்கத்தின் மீது விழும் இயற்கைச் சூரிய பூஜை நிகழ்வு, ஆண்டுதோறும் மார்கழி 25 முதல் தை 10 வரை காலை வேளையில் நடைபெறுகிறது.மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்த இங்கு நடத்தப்படும் புதன் பிரதோஷ வழிபாடு மிகவும் விசேஷமானது. மேலும், நவகிரக மண்டபத்தில் பால சனீஸ்வரர் குழந்தை வடிவில் சூரியனுக்கு அருகே வீற்றிருப்பது வேறு எங்கும் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

குழந்தைகள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ, அவர்களை இறைவனின் திருவடிகளில் அர்ப்பணித்து மீண்டும் பெறும் தனித்துவமான பரிகாரச் சடங்கும் இக்கோவிலில் பின்பற்றப்படுகிறது. கோவில் நடை திறக்கும் நேரம்:காலை: 7:00 மணி முதல் 11:30 மணி வரை மாலை: 4:00 மணி முதல் 8:00 மணி வரை

செல்லும் வழி:

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு, புதுக்கோட்டை – இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பயணித்து வடக்கடுமுகம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எளிதில் செல்லலாம்.