உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அவ்வப்போது பழைய இயங்குதளங்களுக்கான (OS) தனது சேவையை நிறுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மிகப்பழைய ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்கும் செல்போன்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வரும் செப்டம்பர் 8, 2026 முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பதிப்புகளில் வாட்ஸ்அப் சேவை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow) மற்றும் அதற்கும் குறைவான மென்பொருள் பதிப்புகளில் இயங்கும் அனைத்து மொபைல் போன்களிலும் வாட்ஸ்அப் இனி செயல்படாது.

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்டுகள் பழைய மென்பொருள்களில் ஒத்துழைக்காததே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உங்கள் போனில் வாட்ஸ்அப் தொடர்ந்து தடையின்றி இயங்க வேண்டுமானால், பயனர்கள் தங்களது மொபைல் மென்பொருளைப் புதிய பதிப்பிற்கு மேம்படுத்த வேண்டும். ஒருவேளை உங்கள் மொபைல் போன் புதிய அப்டேட்டுகளை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தப் புதிய மொபைலுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும்.

மேலும் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே உங்கள் முக்கியமான உரையாடல்களை (Chats) ‘பேக்-அப்’ (Back-up) செய்துகொள்ளுமாறு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.