சமூக வலைத்தளங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் செயலி, தனது பயனர்களுக்காக ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ (Instagram Plus) என்ற புதிய கட்டணச் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருந்த இன்ஸ்டாகிராம், காலப்போக்கில் வீடியோ பதிவேற்ற வசதியையும் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, டிக் டாக் தடைக்குப் பிறகு அறிமுகமான ‘ரீல்ஸ்’ (Reels) அம்சம் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பயனர்களைக் கவர்வதற்காகத் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம், தற்போது இந்த பிரீமியம் சேவையைக் கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ திட்டத்தைப் பெற பயனர்கள் மாதத்திற்கு ரூ.299 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தச் சந்தா திட்டத்தின் மூலம் பயனர்களுக்குப் பல்வேறு கூடுதல் அம்சங்களும், தனிப்பயனாக்கப்பட்ட சிறப்புகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘இன்ஸ்டா பிளஸ்’ திட்டம் முற்றிலும் பயனர்களின் விருப்பத்தேர்வு மட்டுமே. இன்ஸ்டாகிராமை தற்போது இலவசமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்கள் வழக்கம்போல் தங்களது இலவச சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே நேரத்தில் சாதாரண பயனர்களுக்குக் கிடைக்காத சில பிரத்யேக மற்றும் கூடுதல் வசதிகள் பிளஸ் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.  இன்ஸ்டாகிராம் நிறுவனம் எதிர்காலத்தில் கொண்டு வரவிருக்கும் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அம்சங்களை, சாதாரண பயனர்களுக்கு முன்பாகவே ‘பிளஸ்’ உறுப்பினர்கள் பயன்படுத்திச் சோதித்துப் பார்க்கும் (Early Access) அறிய வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் கூடுதல் அனுபவத்தையும், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் பயன்படுத்த விரும்பும் பயனர்களையும் இலக்காகக் கொண்டு இந்த புதிய பிரீமியம் சேவை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.