மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மிகச்சிறிய வாகன விபத்துக்காக ஒரு குடும்பத்தையே மிரட்டி அச்சுறுத்திய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதில் ஆத்திரமடைந்த ஒரு நபர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின் காரை வழிமறித்துள்ளார். காரின் உள்ளே சிறு குழந்தைகளும் பெண்களும் இருப்பதை அறிந்தும், அந்த நபர் தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைக்கப்போவதாக சைகை காட்டி மிரட்டியுள்ளார்.

​”அண்ணா.. காரில் குழந்தைகள் இருக்கிறார்கள், பயப்படுகிறார்கள், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்” என அந்த தந்தை எவ்வளவோ கெஞ்சியும், ஆவேசமான அந்த நபர் எதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, “சிறு விபத்துகளுக்கு இழப்பீடு பெற சட்ட வழிகள் இருக்கும்போது, இப்படி அராஜகத்தில் ஈடுபடுவது முறையல்ல” என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.