மனிதர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை, சச்சரவுகள் மற்றும் அதனால் உண்டாகும் மனவருத்தங்கள் விலங்குகளுக்கும் பொதுவானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜப்பான் மிருகக்காட்சிசாலையில் உள்ள 13 வயது ஆண் கொரில்லா ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கியோமாசா’ என்ற அந்த ஆண் கொரில்லா, தனது பெண் துணையுடன் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, கூட்டத்திலிருந்து விலகி கூண்டின் படிக்கட்டுகளில் தனியாக அமர்ந்துள்ளது.

சுமார் 62 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், அந்த கொரில்லா தனது கைகளைத் தலையில் வைத்தபடியும், தாடையைத் தாங்கியபடியும் ஏதோ ஒரு தீவிர சிந்தனையில் மூழ்கியிருப்பது போன்ற மனிதர்களின் உடல்மொழியை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது. தம்பதியருக்குள் சண்டை நடந்தால் கணவன்மார்கள் தனியாக அமர்ந்து யோசிப்பதைப் போலவே இந்த கொரில்லாவின் செயல்பாடுகளும் இருந்ததால், அங்கிருந்த பார்வையாளர்களும் நெட்டிசன்களும் இதனை வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மனிதர்களின் டி.என்.ஏ (DNA) அமைப்போடு 98 சதவீதம் ஒத்துப்போகும் கொரில்லாக்கள், பூமியில் மனிதர்களுக்கு மிக நெருக்கமான விலங்கினமாகக் கருதப்படுகின்றன. இவை தங்களுக்குள் ஆழமான குடும்பப் பிணைப்பைக் கொண்டிருப்பதோடு மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் மற்றும் பொறாமை போன்ற மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடியவை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் பல மிருகக்காட்சிசாலைகளில் கொரில்லாக்கள் தங்களின் துணையின் இறப்பிற்குத் துக்கம் அனுசரிப்பதும், குட்டிகளிடம் பாசம் காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், காதலி அல்லது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு இரவெல்லாம் தூங்காமல் யோசிக்கும் ஆண்களின் நிலையை இந்த கொரில்லா பிரதிபலிப்பதாகக் கூறி, இணையவாசிகள் இதனை ‘தத்துவஞானி கொரில்லா’ எனப் பாராட்டி, சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.