மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் ‘அசோசியேட்’ பணியில் இருக்கும் மாலேகானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது சக ஊழியர்களான ரசா மேமன் மற்றும் ஷாருக் குரேஷி ஆகியோர் மீது மிகக் கடுமையான பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஷாருக் குரேஷி தன்னைத் தனியாக அழைத்து, “உனக்கு பாய்பிரண்ட் இருக்கிறானா? முன்னால் யாரையாவது காதலித்தாயா?” என ஆபாசமாகப் பேசித் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரசா மேமன் அந்தப் பெண்ணின் உடல் அமைப்பைக் குறித்துக் கேலி செய்ததோடு, “ஜிம்முக்குச் சென்றால் தான் உடம்பு ஒரு ஷேப்புக்கு வரும், அப்போதுதான் நீ அழகாக இருப்பாய்” என வக்கிரமாகப் பேசியுள்ளார்.

குறிப்பாக, கடந்த மார்ச் 19-ஆம் தேதி ‘குடிபாட்வா’ பண்டிகையை முன்னிட்டு அந்தப் பெண் புத்தாடை அணிந்து வந்தபோது, ரசா மேமன் அவரை அநாகரிகமாகப் பார்வையிட்டதோடு, “இன்று பண்டிகை ஆயிற்றே, நீ பூஜை செய்யமாட்டாயா? சும்மா மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் தான் அலுவலகம் வருவாயா?” என மத ரீதியாகவும் புண்படுத்தியுள்ளார்.

ஷாருக் குரேஷி தொடர்ந்து அந்தப் பெண்ணைத் பின்தொடர்ந்து வந்து, கட்டாயமாக வெளியே அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். நிறுவனத்திற்குள்ளேயே ரசா மேமன், ஷாருக் மற்றும் ஷபி ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், புகார் அளிக்கப் பயந்து மன உளைச்சலில் இருந்ததாக அந்தப் பெண் போலீசாரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் ஐடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.