மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, விளையாட்டு உபகரணம் தலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மதியம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் அந்தச் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த கனமான இரும்பு சறுக்கு மரம் (Slide) திடீரென பெயர்ந்து சிறுமியின் தலையிலேயே விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அந்த ஹவுசிங் சொசைட்டியின் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழைய மற்றும் துருப்பிடித்த விளையாட்டு உபகரணங்களை முறையாகப் பராமரிக்காமல் விட்டதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த நிர்வாகமே இதற்குப் பொறுப்பு என்றும் அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு பிஞ்சு உயிர் இவ்வளவு கொடூரமாகப் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
