உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில், மாமனார் ஒருவர் தனது மருமகளை வீதிக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷில் துபே என்ற அந்த நபர், தனது மருமகள் மீனாட்சி பாண்டேவை வீட்டின் வாசலுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, அவரது ஆடைகளைக் கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு கதறியும், அந்த முதியவர் இரக்கமின்றி நடந்து கொண்ட காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. தனது மகனுக்கு மறுமணம் செய்து வைக்கும் நோக்கில், மருமகளை வீட்டை விட்டு விரட்டவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனாட்சி பாண்டே மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு நேர்ந்த காயங்களைக் காட்டி அழுத அவர், காவல்துறையினர் தனது புகாரை முதலில் ஏற்கவில்லை என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உருக்கமாகக் கூறினார்.

இந்த வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கான்பூர் காவல்துறையினர் தற்போது சுஷில் துபே மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இவ்வளவு கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.