மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சகன் புஜ்பால் சென்ற ஹெலிகாப்டர், ஹெலிபேடிற்குப் பதிலாக கார் நிறுத்துமிடத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, அமைச்சர் புஜ்பால் புனே மாவட்டம் புரந்தர் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அப்போது, விமானியின் கவனக்குறைவு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஹெலிகாப்டர் ஒதுக்கப்பட்ட இடத்தில் தரையிறங்காமல் அருகிலிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தரை இறங்கியது. இந்த அசாதாரணமான தரையிறக்கம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சகன் புஜ்பால், விமானி தவறுதலாக வேறு இடத்தில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சோகம் இன்னும் மறைவதற்குள், ஒரு அமைச்சரின் ஹெலிகாப்டர் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தரையிறங்கியது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று புனே மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிருஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
