பீகாரில் உறைவிடப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த ஐந்து வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெஹானாபாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிதான் அந்த சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
மேலும் விடுதி உணவகத்தில் பணிபுரிந்து வந்த முகேஷ் என்ற ஊழியர், சிறுவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவனது கழுத்தை அறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
இந்தக் குற்றத்தை மறைப்பதற்காக சிறுவன் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியதுடன், காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்தான். காவல்துறையினரின் விசாரணையில், சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதும், பாலியல் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி முகேஷ் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
