உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருடர்கள் நகை மற்றும் பணத்தைத் தொடாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஞானசந்திரா என்பவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கஷ்டப்பட்டு ஒரு சிலிண்டரை வாங்கியிருந்தார்.
திருடர்கள் பயந்து அந்த சிலிண்டரை சங்கிலியால் கட்டிப் பூட்டியிருந்தும், நள்ளிரவில் புகுந்த திருடர்கள் சங்கிலியை உடைத்து சிலிண்டரை மட்டும் தூக்கிச் சென்றுள்ளனர். அருகில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் எதையும் அவர்கள் தொடவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.
இதேபோல் பஹ்ரியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்திலும் சிலிண்டர்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் திருடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, திருடர்களின் பார்வை இப்போது தங்கம், வைரத்தை விட்டுவிட்டு சிலிண்டர் பக்கம் திரும்பியுள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டர் திருடப்படுவதைத் தடுக்க மக்கள் இப்போது கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
