மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வீட்டிலேயே கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நீதா என்ற பெண் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது மாமனார் மற்றும் மாமியார் பழங்காலப் பகை காரணமாக கடப்பாரை மற்றும் தோசைக்கல்லால் தாக்கி அவரைக் கொன்றுள்ளனர்.
ஆசிரியராகப் பணியாற்றும் நீதாவின் கணவர் தயாராம் சாஹு, தனது தாயார் மட்டும் இந்த கொலையைச் செய்திருக்க முடியாது என்றும், தனது தந்தையையும் இதில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் மற்றொரு திடுக்கிடும் தகவலாக, தயாராம் சாஹுவின் முதல் மனைவியும் ஏற்கனவே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அப்போது அது தற்கொலை என மூடி மறைக்கப்பட்டதாகப் பெண்ணின் வீட்டார் தற்போது குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது மாமியாரைக் காவல்துறை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மாமனாரைத் தேடி வருகின்றனர். ஒரு கர்ப்பிணிப் பெண் தனது குடும்பத்தினராலேயே படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
