அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு, ஏதோ வழக்கமான அரசியல் பதிலடி போலக் கடந்து போகக்கூடிய ஒன்றாக இல்லை. அதில் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு, சட்டம்-ஒழுங்கு குறித்த காரசாரமான விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் என அரசியல் களத்தை சூடாகியுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நிர்மல் குமார் வெளிப்படையாகவே உடைத்துப் பேசியுள்ளார். “நீட் தேர்வு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதிரானது, அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், அதற்கடுத்ததாக வைத்த விமர்சனம்தான் தற்போதைய அரசியல் களத்தில் அனலைக் கூட்டியிருக்கிறது.
கடந்த காலங்களில் “நீட்டை ரத்து செய்ய ரகசியம் வைத்திருக்கிறோம்” என்று உதயநிதியால் கூறப்பட்ட வாக்குறுதிகளை ‘பொய்யானது’ எனச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசால் மட்டுமே நீட்டைத் தடுக்க முடியும் என்ற நிதர்சனத்தை ஓபனாகப் பேசியுள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை என்று கூறியதன் மூலம், நீட் விவகாரத்தில் தங்களது பிம்பத்தை ஒரு ‘நேர்மையான நிலைப்பாடாக’க் காட்ட அவர் முற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அடுத்ததாக, விளாத்திகுளம் எம்.எல்.ஏ மீதான நடவடிக்கை குறித்து அவர் அளித்த விளக்கம் மிகவும் கவனிக்கத்தக்கது. சாதாரண நபர் சாலையில் பேசுவதற்கும், மக்கள் பிரதிநிதியான ஒரு எம்.எல்.ஏ மைக் பிடித்து பொதுமேடையில் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசும்போது, அது ஆதரவாளர்களிடையே பெரிய கைகலப்பாகவும், சட்டம்-ஒழுங்குச் சிக்கலாகவும் மாறக்கூடும் என்றார்.
திமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சருக்கு எதிராக ட்வீட் போட்டதற்காகவே குண்டாஸ் பாய்ந்த ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம்; 70 வயது மூதாட்டியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட கதையெல்லாம் இங்கு உண்டு. அன்று நீங்கள் செய்தது என்ன, இன்று நாங்கள் சட்டப்படி செய்வதை விமர்சிப்பதா?”. மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணைவது குறித்த ‘குதிரை பேர’ புகாருக்கு அவர் அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் தாங்களாக விரும்பி வருகிறார்களே தவிர, அவர்களிடம் எந்தப் பேரமும் பேசப்படவில்லை. எங்கள் எம்.எல்.ஏ-விடம் தான் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டு, ஆடியோ ஆதாரத்தோடு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறி, நிஜமான குதிரை பேரம் யார் பக்கம் நடந்தது என்பதை அம்பலப்படுத்தினார்.
