உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரில், கணவனை இழந்த பெண்ணை அவரது காதலனே தலை துண்டித்து படுகொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பாப்லி என்ற பெண், புற்றுநோயால் தனது கணவர் அஜய் இறந்த பிறகு, அவரது நண்பரான விகாஸ் என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றாகப் பணியாற்றிய நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையில், விகாஸின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாப்லி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்தத் திருமண வற்புறுத்தலால் ஆத்திரமடைந்த விகாஸ், தனது மைத்துனர் அமன் மற்றும் ஒரு நண்பருடன் சேர்ந்து பாப்லியைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த வாரம், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குப் பாப்லியை அழைத்துச் சென்ற விகாஸ், கூர்மையான ஆயுதத்தால் அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகத் தலையைச் சடலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வீசி எறிந்துவிட்டுத் தப்பியுள்ளார்.

தலை இல்லாத சடலத்தைக் கண்டெடுத்த போலீசார், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாப்லியின் அடையாளத்தை உறுதி செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில் விகாஸ் மற்றும் அவரது மைத்துனர் சிக்கிய நிலையில், அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருமண ஆசை காட்டி நண்பனின் மனைவியையே கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.