திருநெல்வேலியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளில் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

விளாத்திகுளம் சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை என்றும், மக்கள் துயரத்தில் இருக்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்து விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம் என்ற திமிரில் திமுக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பெண்கள் திமிறி எழுந்து இந்த ஆட்சியை அகற்றப் போவது உறுதி என்றார். தமிழகத்தில் திமுக அரசு டாஸ்மாக்கில் மட்டும்தான் ‘பாஸ்மார்க்’ வாங்கியுள்ளது என்றும், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் சாடினார்.

விரைவில் பாஜகவின் மக்கள் நலனுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறிய தமிழிசை, தமிழக மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.