ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தான் பிறந்து வளர்ந்த இப்பகுதி மக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

ஆளுங்கட்சி வாங்கியுள்ள இந்தக் கடனை மக்கள் தான் கூடுதல் வரி செலுத்தி அடைக்க வேண்டியிருக்கும் என்றும், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மும்முனை மின்சாரம் போன்ற நற்பணிகளை திமுக அரசு செய்யத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களைச் சந்திக்க பயப்படுவதாகவும், செல்வாக்கை இழந்ததால் தற்போது 5,000 ரூபாய் வழங்கி வருவதாகவும் இ.பி.எஸ் விமர்சித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், மத்திய அரசின் ஆதரவுடன் தேவையான நிதியைப் பெற்று மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை அதிமுக கொடுத்த அழுத்தத்தாலேயே வழங்கப்பட்டதே தவிர, பெண்களின் நலனுக்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசின் ஊழல்கள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் விற்பனையில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 24,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மது பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று இந்த மெகா ஊழல் நடைபெறுவதாகவும், அமலாக்கத்துறை இதுகுறித்து விசாரித்தால் பல ஆயிரம் கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறினார்.

நகர்ப்புற வளர்ச்சித் துறையிலும் ஊழல் மலிந்துள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அமைச்சர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.