பொதுவாகச் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட அளவில் ‘டார்க் சாக்லேட்’ சாப்பிடுவது நமது மூளையின் செயல்பாட்டிற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது என்று மருத்துவ ஆய்வுகளும் குடலியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இனிப்புகள் நிறைந்த சாதாரண சாக்லேட்டுகளை விட, அதிக அளவு கோகோ   சேர்க்கப்பட்ட டார்க் சாக்லேட் உடலுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

டார்க் சாக்லேட்டில் ‘ஃப்ளாவனால்கள்’  எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. இதன் காரணமாக, ஞாபக சக்தி மேம்படுவதோடு, மூளையின் கவனம் செலுத்தும் திறனும், சுறுசுறுப்பும் கணிசமாக அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

அதேபோல், நமது செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் டார்க் சாக்லேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள், குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு  நல்ல உணவாக அமைகின்றன. இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தடுக்கப்பட்டு, செரிமானக் கோளாறுகள் மற்றும் வீக்கங்கள் குறைகின்றன.

இருப்பினும், டார்க் சாக்லேட் ஆரோக்கியமானது என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் 70 சதவீதத்திற்கும் அதிகமான கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டை மிகக் குறைந்த அளவில் (ஒரு சிறிய துண்டு) சாப்பிடுவதே போதுமானது. அளவுக்கதிகமாகச் சாப்பிடும் போது அதில் உள்ள கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம் என்பதால் மிதமான பயன்பாடே சிறந்தது.