மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் திமுக இணைந்ததை வரவேற்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
2008-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் ஆற்றிய உரையைக் கண்டு மறைந்த தலைவர் கலைஞர் அவரை “பச்சைத்தமிழர்” என்று பாராட்டியதை நினைவுகூர்ந்த ஸ்டாலின், அரசியலில் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் பண்புடனும் சிரித்த முகத்துடனும் இருப்பவர் ஓ.பி.எஸ் என்று புகழ்ந்தார்.
சட்டமன்றத்தில் ஒருமுறை தன்னைப்பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததையே பெரிய குற்றச்சாட்டாக மாற்றிய போதிலும், அவர் தனது அரசியல் மாண்பை விட்டுக்கொடுக்கவில்லை என்றும், விஸ்வாசத்திற்குச் சான்றாகத் திகழ்பவர் என்றும் பாராட்டினார்.
அதே சமயம், எடப்பாடி பழனிசாமியைத் துரோகத்தின் அடையாளம் என்று கடுமையாகச் சாடினார். சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு, பின்னர் அவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி என்று குறிப்பிட்ட ஸ்டாலின், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே அவர் அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் நேர்மையாக நடந்துகொண்டவர் ஓ.பி.எஸ் என்றும், தன்னைத் தற்காத்துக்கொள்ள எதையும் செய்பவர் பழனிசாமி என்றும் இருவருக்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்கிப் பேசினார்.
