ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை (Content) ஒளிபரப்பியதாகக் கூறி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 OTT தளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், “இணையம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோத மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைப் பரப்பும் OTT தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஆன்லைன் தளத்தின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து கடுமையான மற்றும் இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரே அடியாக 50 OTT தளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த தகவல், தற்போது சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
