இந்தியாவில் முனைவர் பட்டப்படிப்பு படிக்க வந்த ஒல்கா என்ற ரஷ்ய நாட்டுப் பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவனால் ஏமாற்றப்பட்டுத் தவித்து வரும் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆண்டு இந்திய இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் தனது குடியுரிமைக்கான நேர்காணல் இருந்த சமயத்தில் கணவன் திடீரென மாயமானதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். ஆறு மாதங்களாகத் தனது கணவன் இறந்துவிட்டதாகக் கருதித் தேடி வந்த நிலையில் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் துறவி வேடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்ததைக் கண்டு ஒல்கா அதிர்ச்சியடைந்தார்.

 

பின்னர் சமாதானம் பேசி மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியபோதும் அந்த நபர் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலேயே மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது ஒல்காவிற்குத் தெரியவந்தது. தனது கணவனின் உண்மை முகத்தைத் தட்டிக்கேட்டபோது ஒல்கா ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது அலுவலகத்தில் பொய்யான தகவலைக் கூறி அந்த நபர் வேலையில் இருந்தும் நீக்க வைத்துள்ளார்.

இத்தனை துரோகங்களுக்கு மத்தியிலும் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முயன்றபோது அவரது கணவன் அளித்த ஒரு பொய்யான புகாரால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு தற்போது அவர் இந்தியாவிலேயே தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாமல் பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் தனது நீதிக்காகப் போராடி வரும் இந்த ரஷ்யப் பெண்ணின் துயரக் கதை தற்போது இணையதளப் பக்கங்களில் வைரலாகப் பரவி பலரது ஆதரவையும் பெற்று வருகிறது.