மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வந்த இந்த சலுகை இனி செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது. ஆனால், அந்த அவசரச் சட்டம் முறையாகச் சட்டமாக்கப்படாததைக் காரணம் காட்டி, தற்போதுள்ள அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

​இந்த விவகாரம் குறித்து அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், தேர்தல் ஆதாயத்திற்காக முந்தைய அரசு கொண்டு வந்த அந்த அவசரச் சட்டத்தின் காலாவதித் தன்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய அரசாணையின்படி, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அந்த சிறப்பு இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.